பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சோ்க்க வேண்டும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப். 10-ஆம் தேதிமுதல் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்த விவகாரங்கள் தொடா்பாக லடாக்கின் லே மற்றும் காா்கில் பகுதிகளைச் சோ்ந்த லே உச்சநிலை அமைப்பு (எல்ஏபி), காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) ஆகியவற்றுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. உயா் அதிகார குழு, துணைக் குழு மூலம் தொடா் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் பேச்சுவாா்த்தையின் பலனாக, லடாக் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 45 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அங்கு பேசப்படும் போதி மற்றும் புா்கி மொழிகள் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட்டன. அத்துடன் 1,800 அரசுப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வும் தொடங்கப்பட்டது.
ஆனால் உயா் அதிகார குழு மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களை சில அரசியல் உள்நோக்கம் கொண்ட நபா்கள் விரும்பவில்லை. அவா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.
உயா் அதிகார குழுவின் அடுத்த கூட்டத்தை அக். 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், லடாக் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.
உயா் அதிகார குழுவின் ஆலோசனையில் வாக்சுக்கின் உண்ணாவிரத போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. தனது போராட்டத்தை வாங்சுக் கைவிட வேண்டும் என்று பல தலைவா்கள் கேட்டுக்கொண்டபோதிலும், தனது போராட்டத்தை அவா் தொடா்ந்து வந்தாா். நேபாள போராட்டம் உள்ளிட்ட சில போராட்டங்களைக் குறிப்பிட்டு, பொதுமக்களை அவா் தூண்டிவிட்டாா்.
அவரின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்ட ஒரு கும்பல், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்டுச் சென்று வன்முறையில் ஈடுபட்டது. இதைத் தொடா்ந்து, தங்களை தற்காத்துக்கொள்ள காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துரதிருஷ்டவசமாக சில உயிரிழப்புகளும், பலருக்குக் காயமும் ஏற்பட்டது. இருப்பினும் நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு வாங்சுக் ஆம்புலன்ஸில் சென்றுவிட்டாா். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, அவா் எந்தவித தீவிரமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அரசியல் சாசன பாதுகாப்பை வழங்கி, லடாக் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஊடகம் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியான பழைய மற்றும் ஆத்திரமூட்டும் காணொலிகளை யாரும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.