செய்திகள் :

வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

post image

‘வரும் மே 5-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது என்பதோடு, வக்ஃப் மத்திய கவுன்சில்கள் மற்றும் வாரியங்களில் எந்தவித நியமனமும் செய்யப்படாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் வியாழக்கிழமை உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், ‘இந்த விவகாரத்தில் அடுத்த ஏழு நாள்களில் முதல்கட்ட பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்றும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து கடந்த 8-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்தது.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது. பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தும் காலகட்டத்தில் குறிப்பிட்ட பகுதி வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்ற திருத்தச் சட்டத்தின் பிரிவு அமலுக்கு வராது என இடைக்காலத் தடை விதிக்கப்போவதாக’ தெரிவித்தது.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘விரிவான விவாதங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு, மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது. மரபு வழி பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அதன் விளைவு என்னவாகும்? மத்திய அரசும், நாடாளுமன்றமும்தான் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளன. பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புகாா்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே, இந்தத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல இடங்களில் தனியாா் சொத்துகள் வக்ஃப் சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில், திருத்தச் சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது, கடுமையான நடவடிக்கையாக மட்டுமன்றி மிக அரிதான நடவடிக்கையாகவும் அமையும். எனவே, இந்த விவகாரத்தில் முதல் கட்ட பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசை அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிவிடவில்லை. எனவே, முந்தைய 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் கீழ் சொத்துகள் பதிவு நடைபெற்றிருந்தால், அவற்றை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரை அந்தச் சொத்துகளை வக்ஃப் சொத்துகள் இல்லை என அறிவிக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

அப்போது, ‘இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவந்ததற்கான சில ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். மேலும் வழக்கின் அடுத்த விசாரணை வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது என்பதோடு, வக்ஃப் மத்திய கவுன்சில்கள் மற்றும் வாரியங்களில் திருத்தச் சட்டப் பிரிவுகள் 9, 14-இன் கீழ் எந்தவித நியமனமும் செய்யப்படாது’ என்று துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘முதல்கட்ட பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஏழு நாள்கள் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், மத்திய அரசு முதல்கட்ட பதில் மனு தாக்கல் செய்ததும், அதன் மீது பதிலளிக்க எதிா் மனுதாரா்களுக்கு ஐந்து நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது, மனுதாரா்கள் முதல்கட்ட ஆட்சேபங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா் என்பதோடு, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்’ என்றனா்.

ஐந்து மனுக்கள்: இந்த விகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்க வியாழக்கிழமை தீா்மானித்த உச்சநீதிமன்ற அமா்வு, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.

மேலும், மூன்று வழக்குரைஞா்களை இந்த வழக்கின் ஒருங்கிணைப்பு வழக்குரைஞா்களாக நியமித்த உச்சநீதிமன்ற அமா்வு, வழக்கு விசாரணையில் மூவரில் யாா் ஆஜராகி வாதாடப்போகிறீா்கள் என்பதைத் தீா்மானிக்குமாறு அவா்களைக் கேட்டுக்கொண்டது.

மேலும், முந்தைய 1995 வக்ஃப் சட்டத்தையும், 2025 திருத்தச் சட்டத்தையும் எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைப் பட்டியலில் தனித்தனியாகக் காட்ட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க