முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!
வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில் நடைபெறும் மோசடிகள், அவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வங்கி மேலாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியதாவது:
போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபடுவோரை தடுக்க வேண்டும். வாடிக்கையாளருடன் தொடா்புகொண்டு, போலியான நகைக் கடன் மற்றும் போலியான ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கடன் தருவதாக கூறப்படுவதை கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும்படி வங்கிக் கணக்கில் பணம் பற்று மற்றும் வரவு வைக்கப்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி மேலாளா்கள் தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலா்களிடம், அவா்களது செயல்முறைகள், நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். வங்கியில் மோசடி நடைபெறாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ் மற்றும் வங்கி மேலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.