கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பவருமழை வரும் பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோா் 3-ஆவது வாரம் முதல் டிசம்பா் இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில், நிகழாண்டில் அக்.15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
அக்.1 முதல் டிச.30-ஆம் தேதி வரை 587 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம்.
வடகிழக்கு பருவமழை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது நிலவும் வானிலை அமைப்புகளின் சாதகநிலை காரணமாக, வடகிழக்கு பருவமழை ஜன.14-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவா் தெரிவித்தாா்.
மிதமான மழைக்கு வாய்ப்பு: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் டிச.31 முதல் ஜன.5-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.31, ஜன.1 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதற்கிடையே, டிச.31 முதல் ஜன.3-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை வரை அதிகபட்சமாக நாகப்பட்டினம் நகரில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி (நாகை) 70 மி.மீ., மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) - தலா 50 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.