வடுகபட்டி குங்கும காளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
கமுதி அருகே குங்கும காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பூக்குழி இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அக்னி சட்டி எடுத்தல், வேல் குத்துதல், பூப் பெட்டி, சேத்தாண்டி வேடம் அணிந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தினா். இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை மாலை முளைப்பாரி கரைத்தலும், வருகிற 23-ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெறுகிறது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வடுகபட்டி கிராம மக்கள் செய்தனா்.