சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் கா...
வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!
ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது.
பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது.
எந்த ஒரு மூத்த பெண் யானைக்கும் அதன் கூட்டத்தில் பல பொறுப்புகள் இருக்கும். தலைமை தாங்கி வழிநடத்துவது மட்டுமல்லாமல் வத்சலா அங்கே குட்டி ஈனும் இளம் பெண்களுக்கு ஒரு பாட்டியை போல ஆதரவாக இருந்துள்ளது.

வத்சலா தந்தம் இல்லாத ஆசிய பெண் யானை. இது கேரளாவின் நீலாம்பூர் வனப்பிரிவின் அடர்ந்த காடுகளுக்குள் பிறந்தது. 1972-ம் ஆண்டு மத்தியபிரதேசத்துக்கு கொண்டுவரும்போதே அதன் வயது 50 என்கின்றனர்.
நர்மதாபுரத்தில் வசித்துவந்த அந்த யானை 1993-ம் ஆண்டு பன்னா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்தது முதல் 2004ம் ஆண்டு வரை வத்சலா காடுகளில் பொருள்களை எடுத்துச் செல்ல, கனமான மரங்களைத் தூக்கிவர பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பின்னர், அனுபவமிக்க மூத்த யானையாக, மென்மையான பாதுகாவலராக, காட்டின் பாட்டியாக வாழ்ந்தது. இதனை 'தாதி மா' என சரணாலத்தினர் அன்போடு அழைத்துள்ளனர்.
வத்சலாவின் இறுதி காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்னைகள் மற்றும் (2020 முதல்) பார்வை இழப்பால் அவதிப்பட்டதால் ஹினாட்டா முகாமுக்கு மாற்றியுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அதற்கு கஞ்சி ஊட்டி பேணி வந்துள்ளனர். இறுதிகாலத்தில் மணிராம் என்ற நபர் காட்டுப்பாதையில் யானையின் தந்தைத்தைப் பிடித்துக்கொண்டு நடைக்கு கூட்டிச் சென்று வந்துள்ளார்.

வத்சலாவின் வயதை அதிகாரப்பூர்வமாக கூறும் ஆவணங்கள் இல்லை. இதனால் கின்னஸ் உலக சாதனைகளில் விண்ணப்பிக்க முடியவில்லை. எனினும் வத்சலாவுக்கு 105 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வத்சலாவின் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இல்லை. 2003ம் ஆண்டு மற்றும் 2008ம் ஆண்டுகளில் ராம் பகதூர் என்ற ஆண் யானையால் தாக்கப்பட்டுள்ளது.
முதலில் நடந்த தாக்குதலில் வத்சலாவின் குடல் வெளியில் வரும் வரை தந்தத்தால் கடுமையாக தாக்கியுள்ளது ராம் பகதூர். வனவிலங்கு கால்நடை மருத்துவர் சஞ்சீவ் குமார் குப்தா 200 தையல்கள் போட்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 2008-ல் நடந்த தாக்குதலில் ஆழமான காயங்களை குணப்படுத்தியுள்ளார் மருத்துவர் சஞ்சீவ்.
வத்சலாவுக்கு சொந்த குழந்தைகள் கிடையாது. ஆனால் பல குட்டிகளை தன் சொந்த குட்டிகள் போல பாதுகாத்திருக்கிறது. சுற்றுலாப்பயணிகளை அடிக்கடி தொந்தரவு செய்து தன் கம்பீரத்தை காட்டும் வத்சலாவின் பிரிவு மொத்த சரணாலயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Bidding a heartfelt farewell to #Vatsala, the world’s oldest known Asiatic elephant at 109 years, who passed away in Madhya Pradesh’s Panna Tiger Reserve. A gentle matriarch, Vatsala was a beloved guardian of her herd and was the soul of the reserve. She will be missed. pic.twitter.com/IrjZA32zIT
— Parimal Nathwani (@mpparimal) July 9, 2025