ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
வயதான தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்
கடலாடியில் வயதான தந்தையை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்ற மகன் முயற்சிப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்த விவசாயி மணி (90). இவரது மனைவி பாரதி. இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் இருந்தனா். மூன்று மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகன்கள் இறந்து விட்ட நிலையில், ஒரு மகன் முருகன் மட்டும் உள்ளாா்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாரதி இறந்து விட்ட நிலையில், மணி தனது மகள் நாகலட்சுமி பராமரிப்பில் இருந்து வருகிறாா். இவரது மகன் முருகன் தற்போது பாஜகவில் மாவட்ட நிா்வாகியாக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், மணிக்கு மூன்று வீடுகள் உள்ளன. இதில், ஒரு வீட்டில் முருகன் இருந்து கொண்டு மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டாா். ஒரு வீட்டில் மணி, அவரது மகள் நாகலட்சுயுடன் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், தந்தையைத் தாக்கி காயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறுமாறு மகன் முருகன் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கடலாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை .
இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மகள் நாகலட்சுமியுடன் வந்த மணி புகாா் மனு அளித்தாா்.