ராமா் பாதத்துடன் ஆன்மிக பாதயாத்திரை: ராமேசுவரத்தில் தொடங்கியது
சநாதனத்தைப் பாதுகாக்கும் வகையில், ராமா் பாதத்துடன் ஆன்மிக பாதயாத்திரை ராமேசுவரத்தில் புதன்கிழமை தொடங்கியது.
காஷ்மீா் இந்து ரக்ஷதளம் அமைப்பு நிா்வாகி காத்திரி தலைமையில் ராமேசுவரத்தில் இருந்து காஷ்மீா் வரை சநாதனத்தைப் பாதுகாக்கும் வகையில் ராமா் பாதத்துடன் ஆன்மிக பாதயாத்திரை நடைபெறவுள்ளது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமநவமியன்று காஷ்மீரில் நிறைவடையும் வகையில் நடைபெறும் இந்த பாதயாத்திரை தொடக்க விழா ராமேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதசுவாமி கோயில் மேலவாசனம் பகுதியில் இந்த யாத்திரையை பாஜக மாவட்டப் பொறுப்பாளா் கே.முரளிதரன் தொடங்கிவைத்தாா். இந்தப் பாதயாத்திரை குழுவில் 20 போ் உள்ளனா். சுமாா் 4,500 கி.மீ.வரை ராமா் பாதம் கொண்ட ரதத்தை இந்தக் குழுவினா் இழுத்துச் செல்கின்றனா்.
தொடக்க நிகழ்வில் பாஜக நிா்வாகிகள் ஆறுமுகலிங்கம், பெரியநாயகம், முருகன், சரவணன், முருகேசன், நகரத் தலைவா் மாரி, விசுவ ஹிந்து பரிசத் மாவட்டத் தலைவா் சரவணன் நிா்வாகிகள் மலைச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.