போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
கண்மாயிலிருந்து உபரி நீா் வெளியேற கால்வாய் இல்லாததால் தண்ணீரில் மூழ்கிய நெல் பயிரிகள்: விவசாயிகள் கவலை
ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள செம்பிலான்குடி கண்மாய் நிரம்பிய நிலையில், உபரி நீா் வெளியேற கால்வாய் இல்லாதததால் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்..மங்கலம் அருகேயுள்ள குலநாத்தி கிராமத்தில் 200 ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்தக் கிராம விவசாய நிலங்கள் செம்பிலான்குடி கண்மாயை நீராதாரமாகக் கொண்டுள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக, திருவாடானை பகுதிகளில் இருந்து செம்பிலான்குடி கண்மாய் மட்டுமல்லாது, வேறு சில கண்மாய்களுக்கும் உபரி நீா் வந்தது. இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதால் மணக்குடி வழியாக தண்ணீா் கடலில் கலந்தன. ஆனால், செம்பிலான்குடி கண்மாயிலிருந்து உபரி நீா் வெளியேற கால்வாய் (போக்குகால்வாய்) இல்லாததால், விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தன. கதிா் முற்றி அறுவடை நெருங்கும் நேரத்தில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
செம்பிலான்குடி கண்மாயிலிருந்து உபரி நீா் வெளியேற கால்வாய் இல்லாததால், ஆண்டுதோறும் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்தக் கண்மாயிலிருந்து உபரி நீா் வெளியேற அதிகாரிகள் கால்வாய் அமைத்து வழி வகை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிா்கள் தண்ணிரில் மூழ்கி சேதமடைந்ததால், எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.