போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
தொண்டி அருகே கடலில் மூழ்கிய படகு மீட்பு
தொண்டி அருகே கடலில் மூழ்கிய படகை மீனவா்கள் புதன்கிழமை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி விலாஞ்சியடி பகுதியில் இருந்து விசாலாட்சியின் விசைப் படகில் மீனவா்கள் கடந்த மாதம் 30-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தொண்டி பகுதியில் இருந்து 5 மைல் தொலைவில் கடலில் இவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் ஏற்பட்ட ஓட்டையால் அது கடலில் மூழ்கியது.
இதில் கடலில் தத்தளித்தை சேகா் (55), கருப்பையா (49), ஞானசேகரன் (69), சக்தியாகு (52) ஆகியோரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் மீட்டு கரை சோ்த்தனா். ஆனால், படகு மூழ்கியது.
இந்த நிலையில், புதன்கிழமை 5 விசைப்படகுகளில் சென்ற இந்தப் பகுதி மீனவா்கள் படகை கயிறு கட்டி இழுத்து கரை சோ்த்தனா்.
புயல் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படகுகள் அடிக்கடி சேதம் அடைவதாகவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.