மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் பெரியகண்மாய், மடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய கண்மாய் மூலம் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்திலிருந்து வரும் மழைநீா் நாராயணகாவேரி வழியாக மண்டலமாணிக்கம் பெரிய கண்மாய், முத்துப்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, இடைச்சூரணி உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்குச் செல்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாராயணகாவேரி, மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயின் வரத்துக் கால்வாய்கள், மடைகள் தூா்வாரப்படவில்லை. இந்தப் பகுதி புதா் மண்டி, மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால், கண்மாய்க்கு வரும் சிறிதளவு தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயைத் தூா் வாரி, இதைச் சுற்றியுள்ள மடைகள், வரத்துக் கால்வாய்களை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.