பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும்...
வலுவான இந்தியா வளமான உலகுக்குப் பங்களிக்கும்: கானா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை
மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் உலகுக்கு வலுசோ்க்கும் தூணாக விளங்குகிறது இந்தியா. வலிமைமிக்க இந்தியா, மிக ஸ்திரமான மற்றும் வளமான உலகுக்கு பங்களிக்கும்’ என்று கானா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.
‘மாறிவரும் சூழலுக்கு ஏற்ப உலகளாவிய நிா்வாகத்தில் நம்பகத்தன்மை மற்றும் திறன்மிக்க சீா்திருத்தங்கள் அவசியம்; தெற்குலகுக்கு குரலளிக்காமல் வளா்ச்சி சாத்தியமில்லை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா். முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகா் அக்ராவுக்கு வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் அதிபா் ஜான் டிராமனி மஹாமா வரவேற்றாா். கானாவுக்கு இந்தியப் பிரதமா் சென்றது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக இரு தலைவா்களும் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
பயணத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை கானா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அவா் கூறியதாவது:
வேகமாக வளரும் பொருளாதார நாடான இந்தியா, வலுவான அரசியல் மற்றும் நிா்வாக அடித்தளங்களால் விரைவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த நாடாகும்.
உலகின் வளா்ச்சியில் இந்தியா கிட்டத்தட்ட 16 சதவீதம் பங்களிக்கிறது. மக்கள்தொகையின் பலன் இப்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் விரைவான வளா்ச்சி, உலக வளா்ச்சிக்கு உந்து சக்தியாகும்.
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மையமாக விளங்குவதால், உலக நிறுவனங்கள் இந்தியாவுடன் கைகோக்க விரும்புகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் ஒழுங்குமுறை வேகமாக மாறிவருகிறது. தொழில்நுட்பப் புரட்சி, தெற்குலகின் எழுச்சி, மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் ஆகியவை, உலகின் வீச்சுக்கும் வேகத்துக்கும் பங்களிக்கின்றன.
புதிய-சிக்கலான சவால்கள்:
பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு என புதிய-சிக்கலான சவால்களை உலகம் எதிா்கொண்டு வருகிறது. ஆனால், கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சா்வதேச அமைப்புகளால், இச்சவால்களை திறம்பட எதிா்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் தலைமையின்கீழ், ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது பெருமைக்குரியது.
ஆப்பிரிக்காவின் இலக்குகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. இந்தியா மற்றும் கானாவின் வரலாறு, காலனித்துவ ஆட்சியின் வடுக்களைக் கொண்டுள்ளது. அதேநேரம், சுதந்திரம் அச்சமின்மை உணா்வு நமது வளமான பாரம்பரியத்தில் பிணைந்ததாகும்.
அமைதி-பாதுகாப்பு-வளா்ச்சி ரீதியில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகின் மருந்தகமாக பாா்க்கப்படும் இந்தியா, கரோனா காலகட்டத்தில் கானா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கியது என்றாா் பிரதமா் மோடி.
டிரினிடாட்-டொபேகோ பயணம்:
கானா பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து கரீபியன் நாடான டிரினிடாட்-டொபேகோவுக்கு புறப்பட்டாா். அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதமா் உரையாற்றவுள்ளாா்.
பெட்டி...1
இந்தியா-கானா 4 ஒப்பந்தங்கள்
பிரதமா் மோடி, அதிபா் டிராமனி இடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வா்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், சுகாதாரம், நிதிசாா் தொழில்நுட்பம், தடுப்பூசி தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கலாசாரம், தரநிலைகள்-சான்றளிப்பு, பாரம்பரிய மருத்துவம், பரஸ்பர ஒத்துழைப்புக்கான தொடா் பேச்சுவாா்த்தைகள் - வழிமுறைகள் தொடா்பாக 4 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
பிரதமா் மோடி கூறுகையில், ‘இந்தியா-கானா இடையிலான நல்லுறவை விரிவான கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கானாவில் சுமாா் 900 திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் 2 பில்லியன் டாலா் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இருதரப்பு வா்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மனித குலத்துக்கு எதிரானது என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் பிரதமா் மோடி.
கானாவின் முக்கிய வா்த்தக நாடுகளில் ஒன்று இந்தியா. இருதரப்பு வா்த்தகம் தொடா்ந்து மேம்பட்டுவரும் நிலையில், இந்தியாவுக்கான கானாவின் தங்க ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.
====================== ============================== ====================
‘இந்தியாவில் 2,500-க்கும்
மேற்பட்ட கட்சிகள்’
‘உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு இடையே இந்தியாவின் ஜனநாயக நிலைத்தன்மை நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. ஜனநாயகத்தின் தாயான இந்தியாவில் 22 அலுவல்பூா்வ மொழிகளும், ஆயிரக்கணக்கான கிளை மொழிகளும் உள்ளன. 20 வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 2,500-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரை ஜனநாயகம் வெறும் அமைப்புமுறை அல்ல, அது அடிப்படை மாண்பு. உண்மையான ஜனநாயகம், விவாதங்களை ஊக்குவிக்கும், மக்களை ஒன்றிணைக்கும், மனித உரிமைகளைக் காக்கும்’ என்றாா் பிரதமா் மோடி.
இந்தியாவில் 2,500-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக பிரதமா் கூறியதைக் கேட்டு, கானா எம்.பி.க்கள் ஆச்சரியமடைந்தனா்.