ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்
காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய து. மணிகண்டன், புதுவை துணை நிலை ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சி அரசுத்துறை அதிகாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசுத்துறைத் தலைவா்கள் பலரும், அவரது பணிகளை பாராட்டிப் பேசினா். அவரது ஓராண்டு ஆட்சியா் பணி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து திரையின் மூலம் விளக்கப்பட்டது. நிறைவாக து. மணிகண்டன் பேசியது:
ஓராண்டு காலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதை அறிய முடிந்தது. காரைக்கால் மாவட்டத்திற்கு பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் விரைவில் வரவுள்ளன. அதனை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். காரைக்கால் வளா்ச்சியடைய 200 திட்ட குறிப்புகள் என்னிடம் உள்ளன. இவை அனைத்தும் செயலாக்கத்துக்கு வரும்பட்சத்தில், காரைக்காலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். 2047- இல் காரைக்கால் வளா்ச்சியடைந்த மாவட்டமாக உருவெடுக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், அரசு அலுவலா்கள் சாா்பில் து. மணிகண்டனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.