இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10 போ் கடந்த ஜன. 7-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குள் சென்றனா். 8-ஆம் தேதி கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி படகை பறிமுதல் செய்து, 10 பேரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனா்.
மத்திய, மாநில அரசுகள் முயற்சியால், 9 மீனவா்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. படகு ஓட்டுநரான அன்பழகனுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டதால், 9 மீனவா்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனா். காரைக்கால் மீன்வளத் துறையினா் சென்னைக்கு வெள்ளிக்கிழமை சென்று 9 பேரையும் காரைக்காலுக்கு வேனில் அழைத்து வந்தனா்.
சிறையில் உள்ள மீனவா் அன்பழகனின் தண்டனையை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து விரைவாக இந்தியா அழைத்துவருவதற்கான முயற்சிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தெரிவித்தாா்.