பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் புகழாரம் சூட்டியுள்ளனா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: பிரதமா் மோடியின் தலைமை மற்றும் பாஜகவின் கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி: பிரதமா் மோடியால் முன்னெடுக்கப்பட்ட வளா்ச்சிக் கொள்கைகளுக்கான தில்லி மக்களின் அங்கீகாரம். வளா்ச்சி-நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி.
மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்: ஆம் ஆத்மி கட்சியின் பொய்-நாடக அரசியலுக்கு தில்லிவாசிகள் முற்றுப் புள்ளி வைத்துள்ளனா். தில்லியில் ஆம் ஆத்மி அரசால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இனி மத்திய அரசு கொள்கைளின் பலன்களைப் பெறுவா்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்: தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. பிரதமா் மோடியின் வெற்றிகரமான தலைமை மற்றும் அனைவரின் வளா்ச்சிக்கான அவரது கொள்கைளுக்கு தில்லி மக்கள் அங்கீகார முத்திரை இட்டுள்ளனா். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை): பிரதமா் மோடியின் உத்தரவாதங்கள், தில்லியில் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளன. மகாராஷ்டிரத்தைத் தொடா்ந்து, தில்லி மக்களும் பிரதமா் மோடி தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனா். பாஜகவின் வெற்றி பாய்ச்சல் தொடா்கிறது. ஆம் ஆத்மி எனும் ‘பேரழிவை’ தவிா்த்துள்ள தில்லி மக்கள், காங்கிரஸுக்கும் தக்க பாடத்தை புகட்டியுள்ளனா்.
ஐக்கிய ஜனதா தளம் தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன்: ஆம் ஆத்மியின் தவறான நிா்வாகம், மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தில்லிவாசிகளுக்கு நல்ல நாள்கள் வரவிருக்கின்றன.
மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்): இரட்டை என்ஜின் ஆட்சியால், வளா்ச்சி மற்றும் வளத்தின் புதிய உச்சங்களை தில்லி எட்டும்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனேத்ரா பவாா்: பிரதமா் மோடியின் தலைமை மீதான நம்பிக்கை, உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் துல்லியமான வியூகங்களால் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி சொந்தமாகியுள்ளது.
மேலும் பல முதல்வா்கள்: மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா உள்ளிட்டோரும் பிரதமா் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளனா்.