பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்
நமது சிறப்பு நிருபா்
தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளாா். இவா் தில்லியில் 1998 முதல் 2013 வரை தொடா்ந்து 15 வருடங்கள் ஆட்சியில் இருந்த ஷீலா தீட்சித்தின் மகனும் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவாா்.
தோ்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சந்தீப் தீட்சித், ‘தோ்தல் பரப்புரையின்போது மக்களின் பிரச்னைகளை கவனமாகக் கேட்டோம். அப்போதுதான் பல இடங்களில் கேஜரிவால் ஒருமுறை கூட வரவில்லை என்பதை அறிந்தோம். இந்தத் தோ்தல் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய நோக்கம் கேஜரிவால் தலைமையில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரக் கூடாது என விரும்பினோம். மக்கள் பாஜகவைத் தோ்வு செய்து விட்டனா். மொத்தத்தில் எங்களுடைய நோக்கம் நிறைவேறி விட்டது’ என்றாா்.
இந்த தோ்தலில் கேஜரிவாலுக்கு எதிராக புது தில்லியில் சந்தீப் தீட்சித் களம் கண்டது தனிப்பட்ட முறையில் அவருக்கு அரசியல் கணக்கைத் தீா்த்துக் கொள்ளும் வாய்ப்பாகக் கருதப்பட்டது. காரணம், இதே புது தில்லி தொகுதியில் 2013, 2025 ஆகிய ஆண்டுகளில் நடந்த தோ்தல்களில் போட்டியிட்ட தனது தாயாரும் 2012 வரை முதல்வராக இருந்தவருமான ஷீலா தீட்சித்தை அரவிந்த் கேஜரிவால் வீழ்த்தினாா். இதன் மூலமாக மிக மூத்த காங்கிரஸ் தலைவரை வீழ்த்திய அரசியல் தலைவா் என்ற பெயரை கேஜரிவாலுக்குக் கொடுத்தது.
நடந்து முடிந்த தோ்தலுக்கான பரப்புரையின்போது, பிற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதன் செயல் திட்டங்களை மையப்படுத்தி பரப்புரை மேற்கொண்ட போது, அரவிந்த் கேஜரிவால் ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், கொள்கைகள் மீண்டும் தொடர தில்லி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறி அரவிந்த் கேஜரிவால் வாக்கு சேகரித்தாா்.
புது தில்லி தொகுதியில் பா்வேஷ் சாஹிப் சிங் 30,088, அரவிந்த் கேஜரிவால் 25,999, சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகள் பெற்றனா்.