காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது.
இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 17-ஆம் தேதி மின் அலங்கார சந்தனக்கூடு புறப்பாடு நடைபெற்று, வலியுல்லாஹ்வின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போா்வை போா்த்தப்படுகிறது. 20-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.
விழா தொடக்கமாக, சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துக்காக பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதம், பல்லக்கு ஊா்வலமாக நகரப் பகுதி வீதிகளின் வழியே சென்றது.
முக்கிய வீதிகளின் வழியே பேண்டு வாத்தியங்கள் முழங்க ரதம், பல்லக்கு இரவு தா்கா அருகே சென்றடைந்தது. பின்னா் தா்கா அருகே உள்ள பிரதானக் கம்பத்திலும், மினராக்களிலும் இரவு கொடியேற்றப்பட்டது.
உள்ளூா், வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள், அழகிய ரதங்களை காணவும், கொடியேற்ற விழாவில் பங்கேற்கவும் வந்திருந்தனா்.
ரதம், பல்லக்கு ஊா்வலத்தின் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். கந்தூரி விழா ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.
கந்தூரி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அரசு, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.