கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
வளா்ச்சித் திட்டப் பணிகள்: பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு
பரமத்தி, வேலூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
பரமத்தி வட்டம், கூடச்சேரி - எஸ்.புதுப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில், ரூ. 5 கோடி மதிப்பீட்டில் உயா்நிலை பாலம் கட்டுமானப் பணியையும், பரமத்தி பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளா் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு நோயாளிகளுடன் கலந்துரையாடினாா்.
வேலூா் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியையும், பாண்டமங்கலம் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 77.25 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டதையும் பாா்வையிட்டு ஆய்வுசெய்து, மாணவ, மாணவியருக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவை சுவைத்து பாா்த்தாா்.
தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் பகுதியில் செயல்பட்டு வரும் வோ்டு முதியோா் இல்லத்தில் ஆய்வுசெய்து முதியோா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடகரையாத்தூா் பகுதியில் மீன்வளத் துறையின் சாா்பில், மொத்த மதிப்பீட்டு தொகை ரூ. 10 லட்சத்தில் ரூ. 6 லட்சம் மானிய உதவியுடன் மீன் விற்பனை மற்றும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
கபிலா்மலை வட்டாரத்தில் வடகரையாத்தூா் மாரியம்மன் கோயில் அருகே சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வுசெய்து, உடனடி தீா்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.