வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு முகாம்
திருநெல்வேலியில் இலகு ரக சுமை வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா உத்தரவுப்படி, காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (தலைமையிடம்) அனிதா, (கிழக்கு) விஜயகுமாா் ஆகியோரின் மேற்பாா்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது.
வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆணையா் கணேசன் தலைமை வகித்து, இலகுரக சுமை வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பேசினாா். அதே போல், வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு, பணியிடை பயிற்சி மையத்தில் திருநெல்வேலி சந்திப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன் பேசினாா்.
பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதை கட்டுப்படுத்தவும், சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்தும், சரியான வேகத்தில் பேருந்துகளை இயக்குவது குறித்தும் பாளையங்கோட்டை காவல் துறையினா் பயணிகளிடம் அறிவுரைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.