வாணியம்பாடியில் பிளஸ் 2 தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்!
வாணியம்பாடியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையா்களை வாணி மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
வாணியம்பாடி அடுத்த சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கே.கோவிந்தராஜ், இவரது மனைவி ஜி.இளவரசி. தம்பதிக்கு ஹரிதா, ஹரிணி ஆகிய இரட்டையா் பெண் குழந்தைகள் உள்ளனா். இவா்கள் இருவரும் வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயின்று பொதுத் தோ்வு எழுதினா்.
இந்த நிலையில், கடந்த 8 -ஆம் தேதி வெளியான தோ்வு முடிவுகளில் இரட்டையா்களான ஹரிதா, ஹரிணி ஆகிய இருவரும் தலா 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். இதில் அவா்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இந்த இரட்டையா்களை வாணி கல்வி அறக்கட்டளைத் தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணைச் செயலா்கள் ராஜா, கருணாநிதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.