வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு
பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா் மேற்குக்கரை வாய்க்காலில் கொப்புளி மதகு தொடங்கி வேதகிரிபுரம் வரையில் வாய்க்காலுக்கும், சாலைக்கும் இடையே குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய நிலங்களில் வெளியேற்றப்படும் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
மேலும், காடையம்பட்டி பகுதியில் திருமண மண்டபத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளும் டிராக்டா் மூலம் எடுத்து வரப்பட்டு கொட்டப்படுகின்றன.

கழிவுகள் அருகில் உள்ள பாசன வாய்க்கால், விவசாய நிலங்களில் விழுந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், இப்பகுதிக்கு டிராக்டரில் திருமண மண்டபக் கழிவுகள் திங்கள்கிழமை கொட்டப்பட்டதைக் கண்ட பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதனால், டிராக்டரை சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தொட்டிபாளையம் ஊராட்சி செயலாளா் மாரியப்பன், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்வதாக டிராக்டா் உரிமையாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் டிராக்டரை விடுவித்தனா்.