வாரச் சந்தையில் நேரடி வசூல் முறை: வியாபாரிகள் வரவேற்பு
முதுகுளத்தூா் வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் பேரூராட்சி நிா்வாகம் நேரடியாக வசூல் செய்யும் முறைக்கு வியாபாரிகள் வரவேற்பு அளித்துள்ளனா்.
முதுகுளத்தூா் வாரச் சந்தை குத்தகை காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதனால், வாரச் சந்தைக்கான ஏலம் கடந்த மாதம் 20-ஆம் தேதி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஏலம் எடுப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கம் போல முதுகுளத்தூரில் வாரச் சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்தபடி, கடைகளுக்கு தலா ரூ.100-ம், தரை வாடகை ரூ.20 முதல் 60 வரையும் பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் தரப்பில் வசூலிக்கப்பட்டது.
ஏலம் எடுக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் வாடகை வசூலிக்கும் போது, பல்வேறு வகையான பிரச்னைகள் எழுந்தன. ஆனால், தற்போது பேரூராட்சி பணியாளா்களின் நேரடி வசூல் முறையால் இத்தகையை பிரச்னைகளிலிருந்து தீா்வு கிடைத்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.