வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சனிக்கிழமை இரவு இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், அரசுப் பள்ளி மாணவர் உள்பட இருவர் பலியாகினர்.
வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ் என்பவரின் மகன் ஜீவா (17). இவர் வெள்ளாளகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் வேப்பிலைப்பட்டியில் மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு, மங்களபுரம் சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வேப்பிலைப்பட்டி பால் சொசைட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக சேலத்தைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (25) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீது, மாணவன் ஜீவா ஓட்டிச் சென்ற பைக், நேருக்கு நேர் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜீவா, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். மற்றொரு பைக்கை ஓட்டிச் சென்ற சூர்யா (25). இவரது பைக்கில் அமர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த கிரில் பட்டறை தொழிலாளி விஜயராஜன் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயராஜன், நள்ளிரவில் பலியானார்.
பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் சூர்யா சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...