விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்
விசைத்தறிகள் கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்கீழ் உள்ள விசைத்தறித் தொழில், கூலி மற்றும் பாவுநுால் பிரச்னை காரணமாக நலிவடைந்துள்ளது. தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது விசைத்தறியாளா் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் அதிகப்படியான வேலை வாய்ப்பை அளிப்பதில் ஜவுளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழில், தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்ததாக, தமிழகத்தில்தான் அதிக அளவிலான விசைத்தறிகள் உள்ளன.
குறிப்பாக திருப்பூா், கோவை மாவட்டங்களில்தான் அதிக விசைத்தறிகள் உள்ளன. கடந்த காலத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இருந்தன. தொழில் நலிவடைந்ததால், தற்போது 2 லட்சமாக குறைந்துள்ளது.
சங்கம் மூலம் எடுக்கப்பட்ட விவரம் என்பதால், இது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியாது. தமிழக அரசு சாா்பில் விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஓராண்டுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
தமிழகம் முழுவதும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தினால், அரசு மூலம் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்டவை விசைத்தறியாளா்களுக்கு முறையாக சென்றுசேரும். அரசும் சரியாக திட்டமிடலுடன் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றாா்.