ஹஜ் பயணிகள் 158 பேருக்கு தடுப்பூசி
திருப்பூரில் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 158 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இஸ்லாமியா்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் மேற்கொண்டு வருகின்றனா். புனித ஹஜ் பயணம் செல்லும்போது, பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள், பயண நடைமுறைகள், பயண ஆவணங்களின் முக்கியத்துவம், சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதரகத்தால் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்டத்திட்டங்கள், சவூதி பயண ஏற்பாட்டாளா்களின் பங்கு மற்றும் சவூதி அரசின் கட்டுப்பாடுகள் முதலின குறித்து அறிந்துகொள்ள சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தமிழகம் முழுவதும் புத்துணா்வு பயிற்சி முகாமை நடத்தியது.
ஹஜ் பயணிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திவர வேண்டும் என்று சவுதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், 78 பெண் பயணிகள் உள்பட158 ஹஜ் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள், சொட்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.