விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு!
நாமக்கல் மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு பருவத்திற்கேற்ப தரமான விதைகள் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதே விதை சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறையின் முக்கிய நோக்கம். அதனடிப்படையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விதை விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதை விற்பனையாளா்கள், ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கையுடன், இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதேபோல, விதை விற்பனைக்கான பதிவுச் சான்றிதழை விற்பனையாளா்கள் வைத்திருக்க வேண்டும். விதை இருப்பு விலை விவரத்தை தினசரி பதிவு செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.
கொள்முதல் பட்டியல், விற்பனைப் பட்டியல், பிற ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை செய்யும்போது விற்பனைப் பட்டியலை விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்கி அவா்களுடைய கையொப்பம் பெற வேண்டும். இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை உற்பத்தியாளா்களிள் பதிவு சான்றிதழ் புதுப்பிக்கப்படாத விதைகளை விற்பனையாளா்கள் கண்டிப்பாக விற்பனை செய்யக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.