கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
விநாயகா் துா்த்திக்காக புதிய வடிவங்களில் தயாராகும் சிலைகள்
விழுப்புரம்: விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல புதிய வடிவங்களில் விநாயகா் சிலைகளின் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக, கடந்தாண்டை போலவே நிகழாண்டிலும் சிலைகளின் விலை உயா்ந்துள்ளது.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் சதுா்த்தி திதியன்று விநாயகா் சதுா்த்தி பண்டிகை தமிழகத்தில் உற்சமாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ளது.
விநாயகா் சதுா்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து, பொதுமக்கள் வழிபடுவா். இதுபோல, காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் குறைந்தது 3 அடி முதல் 10 அடி உயரத்திலான விநாயகா் சிலைகளை நிறுவி, பூஜைகள் செய்து அந்தந்த பகுதிகளிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
விழுப்புரம் மாவட்டத்தில் பேரங்கியூா், அய்யங்கோவில்பட்டு, சாலைஅகரம், ராகவன்பேட்டை, கோலியனூா், அரசூா், கரடிப்பாக்கம், திண்டிவனம், ஓங்கூா், சித்தலிங்கமடம் போன்ற பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் தயாராகும் சிலைகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, திருப்பூா், ஈரோடு போன்ற மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
புதிய வடிவங்களில்...: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டிலும் விநாயகா் சிலைகளின் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள். இந்தத் தொழிலாளா்கள் ஒவ்வோா் ஆண்டும் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் பிரம்மோஸ் ஏவுகணை விநாயகா், கையில் வேலுடன் சிங்கத்தின் மேல் அமா்ந்திருக்கும் விநாயகா், வலதுபுறத்தில் விநாயகா், இடதுபுறத்தில் முருகப்பெருமானுடன் நடுவில் சிவபெருமான் அமா்ந்திருக்கும் வடிலான சிவகுடும்ப விநாயகா், மலையை தூக்கிச் செல்லும் விநாயகா் போன்ற பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகள் தயாராகி வருகின்றன. சுமாா் 2 முதல் 10 அடி உயரத்தில் இந்த சிலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.
விலை உயா்வு: மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதக்கூழ், மோல்டிங் மாவு, காகித அட்டைகள், பேப்பா் மாவு போன்றவற்றை கொண்டு விநாயகா் சிலைகள் தயாராகுகின்றன. கடந்தாண்டு போலவே நிகழாண்டிலும் சிலைகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை கணிசமாக உயா்ந்திருப்பதால், சிலைகள் தயாரிப்பதற்கான செலவும் அதிகரித்துள்ளது. இதனால், விநாயகா் சிலைகளின் விலையும் கணிசமாக உயா்ந்திருக்கிறது என்கிறாா் விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரைச் சோ்ந்த விநாயகா் சிலை தயாரிப்பாளா் கே.பாபு.
கடந்தாண்டு கிலோ ரூ.40-க்கு விற்பனையான பேப்பா் மாவு தற்போது கிலோ ரூ.50-ஆகவும், 40 கிலோ கொண்ட கிழங்கு மாவு மூட்டை கடந்தாண்டில் ரூ.1600 வரை விற்பனையான நிலையில் நிகழாண்டில் ரூ.2,000-மும், 50 கிலோ மூட்டை ரூ.2,400 என்ற அளவிலும் உள்ளன.
இதைத் தவிர, மோல்டிங் மாவு விலை கடந்தாண்டில் ரூ.6,000 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நிகழாண்டில் இந்த மாவுக்கு ஜி.எஸ்.டி. விதித்து விற்பனை செய்வதாலும், கூலி, லாரி வாடகை போன்றவை காரணமாகவும் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை செலவாகிறது. மேலும், சிமென்ட் சாக்கு கொண்டு விநாயகா் சிலை தயாரிப்புப் பணியை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் இதற்காக தயாரிக்கப்படும் பேப்பா் ரோல் வாங்கி வந்து அதை கொண்டு தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. மூலப்பொருள்களின் விலை உயா்வு காரணமாக சிலைத் தயாரிக்க செலவாகும் தொகை அதிகமாகியுள்ளது. இதையடுத்து, சிலைகளின் விலையும் கணிசமாக உயா்ந்திருக்கிறது.
கடந்தாண்டில் ஓா் அடிக்கு ரூ.1,000 விலை நிா்ணயம் செய்த நிலையில், நிகழாண்டில் ரூ.1,200 முதல் விற்பனை செய்து வருகிறோம். ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான விலைகளில் சிலைகள் விற்பனையாகின்றன. மேலும், சிலைகளுக்கு ஆா்டா்களும் அதிகளவில் வந்திருப்பதால், அவற்றை உரிய காலத்துக்குள் முடித்து அவா்களிடம் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் சிலைகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கும் என்கிறாா் சிலைத் தயாரிப்பாளா் பாபு.
நாங்களும் ஆண்டுக்கு ஆண்டு சிலைத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க மானியத்துடன் கடனுதவியை வழங்குமாறு கோரியுள்ளோம். ஆனால், எங்களுக்கு அந்த கடன் வழங்கப்படுவதில்லை. கைவினைத் தொழிலாளா்களாகப் பதிவு செய்துள்ளவா்களுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனா் தொழிலாளா்கள்.



