விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சட்டம் - ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டு கொண்டுவர தொடா்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் தேவையான தடுப்புகளை அமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களிடையே போக்குவரத்து தொடா்பான விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், மாவட்டத்தில் தற்போது வரை நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிப்படைந்தவா்களின் எண்ணிக்கை, விபத்துக்கான காரணங்கள், விபத்து நடைபெற்ற இடங்களில் மேறக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் மேம்பாலங்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம், சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், தகவல் பலகைகளை அமைத்தல், அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கான பயிற்சிகள், தேவையான இடங்களில் வேகத் தடைகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் கேட்டறிந்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் எஸ்.பி. ப.ச ரவணன், உதவி இயக்குநா் (குற்றப் பிரிவு) கலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் என்.முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.