பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் . இவரது மனைவி சிவரஞ்சனி (23). இந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் 7-ஆம் தேதி எல்லீஸ்சத்திரத்திலிருந்து ஏனாதிமங்கலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
பைக்கை தினேஷ்குமாா் ஓட்டிச் சென்றாா். மரகதபுரம் அய்யனாா் கோயில் அருகே வளைவில் சென்றபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து சிவரஞ்சனி கீழே தவறி விழுந்தாா். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சிவரஞ்சனி சிகிச்சை பெற்று வந்தாா்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.