வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
வியாபாரத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கை தேவையா? தவெக தலைவர் விஜய்க்கு தமிழை கேள்வி!
மும்மொழிக் கொள்கை குறித்து தவெக தலைவர் விஜய் கருத்துகள் சொல்லக் கூடாது என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சென்னை அம்பத்தூரில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜி.பாஸ்கரின் அறிமுக கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசுகையில் மும்மொழிக் கொள்கை குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
செய்தியாளர்களுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, ``மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது. அப்படி சொல்வதென்றால், தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என்று அவர் முதலில் சொல்ல வேண்டும். நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்துக்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை; ஆனால், மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா?
இதையும் படிக்க:தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்: உதயநிதி
மும்மொழிக் கொள்கையில் தாய்மொழிக்குத்தான் முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் தமிழ்நாட்டில் தமிழ் கற்பதை திமுகவினர் எதிர்க்கிறார்களா? என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல; தமிழக அரசுதான்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கற்பிக்கப்படும்போது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் மூன்று மொழிகளைப் படிக்கக் கூடாதா? திமுக குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலும்கூட மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
அன்றாடம் மாறிவரும் உலகில் மாணவர்கள் கூடுதலான மொழியைக் கற்றுக் கொள்வதால் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒரு சாதாரண அரசுப் பள்ளி மாணவர் இந்தி மட்டுமில்லாமல், தெலுங்கோ மலையாளமோகூட கற்றுக் கொண்டால் ஆந்திரம் அல்லது கேரளத்திலும்கூட வேலைவாய்ப்பைப் பெறலாம்’’ என்று தெரிவித்தார்.