”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்
சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்திலுள்ள மதகாவ் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் உள்ளூர் மொபைல் கடையில் ஒரு புதிய ஜியோ சிம்மை வாங்கியிருக்கிறார். அதன் பின்னர் அவர் வாட்ஸ் அப்பை திறந்தவுடன் சிம்மின் சுயவிவர படமாக கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார் புகைப்படம் வந்திருக்கிறது.
மணிஷ் மற்றும் கேம்ராஜ் என்ற இரு நண்பர்கள் கிராமத்தில் உள்ள மளிகை கடையில் அமர்ந்திருந்த போது அவர்கள் வாங்கிய புது சிம் கார்டுக்கு பல அழைப்புகள் வந்திருக்கின்றன. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் அழைப்புகள் வந்திருக்கிறது.

இவர்களின் ஒவ்வொரு அழைப்பிற்கும் மணிஷும் கேம்ராஜும் தங்களை மகேந்திர சிங் தோனி என்று அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
அதன் பின்னர் ஜூலை 15ஆம் தேதி மற்றொரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் "பாய் நான் ரஜத் பட்டிதார், அந்த எண் என்னுடையது தயவுசெய்து திருப்பி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அந்த சிறுவர்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு தாங்கள் எம் எஸ் தோனி என்று பதிலளித்திருக்கின்றனர்.
அதன் பின்னர் அந்த தொலைபேசி எண்ணின் முக்கியத்துவத்தை அவர் விளக்கியிருக்கிறார். ஒருகட்டத்திற்கு மேல் இந்த விவகாரம் காவல்துறைக்கு சென்றுள்ளது.
காவல்துறையினர் மணிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு உண்மையிலேயே இது ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் என்று புரிந்துள்ளது. அதன்பின்னர் சிம்கார்டை திருப்பி அளித்துள்ளனர்.
இது குறித்து கேம்ராஜ் கூறுகையில்” இந்த தவறான அழைப்புகள் மூலம் கோலியுடன் பேசியது மிகப் பெரிய தருணம். என் வாழ்நாள் இலக்கையே அடைந்திருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன நடந்தது?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 90 நாட்களுக்கு மேல் செயல்படாத எண்களை மறுசுழற்சி செய்கின்றன. அதன்படி ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண்ணும்,ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சிறுவர்களின் கைக்கு சென்றுள்ளது.