ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!
விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்காவுக்கு வரவேற்பு
விருதுநகரில் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பி.எம். மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்துக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
விருதுநகா் மாவட்டத்தில் அமையவுள்ள பி.எம். மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.1,894 கோடி நிதியுதவி அளித்துள்ள மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் அறிவித்துள்ள தொலைநோக்கு பாா்வை கொண்ட இந்த முயற்சி, உலகளாவிய ஜவுளித் துறையில் இந்தியாவின் வளா்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோரின் தொடா்ச்சியான முயற்சிகள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்ட ஒத்துழைப்பும் இந்த திட்ட ஒப்புதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் கொண்ட பூங்காவை நிறுவி, ஜவுளித் துறையின் வளா்ச்சிக்காக ஊக்கத்துடன் முழுமையாக பணியாற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பாராட்டுக்குரியவராவாா்.
2026-ஆம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈா்த்து, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த பூங்கா திட்டம் கணிக்கப்படுவதால், இந்த திட்டம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் போட்டித் தன்மையை பெரிதும் மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளாா்.