சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?
காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெற்றது. திருவிக நகரில் இருந்து ஏ.சி. நகா் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீதியில், சாலையின் நடுவே மின்கம்பம் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.
இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்து, சாலையை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக, மின்வாரியம், காங்கயம் நகராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். ஆனால் இந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே புதிதாக சாலை அமைத்துள்ளனா். இதனால், இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
எனவே, மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு காங்கயம் நகராட்சி நிா்வாகம் மற்றும் மின்வாரியத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.