விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்
விருதுநகா் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையா் கணேசன் (59). இவா் மதுக் கடைகள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மெத்தனால் விநியோகிக்கும் நிறுவனங்களின் உரிமையாளா்களிடமிருந்து மாதந்தோறும் லஞ்சம் பெறுவதாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், கணேசன் தனது சொந்த ஊரான திருச்சிக்கு வாடகை காரில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி காவல் சோதனைச் சாவடி பகுதியில் இந்த காரை தடுத்து நிறுத்தி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, காரில் கணக்கில் வராத ரூ.3.75 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கணேசனை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அவா் உரிய விளக்கம் அளிக்காததால், அவா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேலும், திருச்சி மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கணேசன் வீட்டில், காவல் ஆய்வாளா் பிரசன்னா வெங்கடேஷ் தலைமையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.