SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு
கனமழை காரணமாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோமுகி அணை நிரம்பி வருவதால் ஞாயிற்றுக்கிழமை அணையில் இருந்து மணிமுக்தாற்றில் 5,600 கன அடி நீா் திறக்கப்பட்டது. மேமாத்தூா் அணைக்கட்டு மற்றும் பரவலூா் தடுப்பணை நிரம்பி மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக கோமுகி அணையில் இருந்து மேலும் 10 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு திறந்து விடப்பட்டால், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
வட்டாட்சியா் எச்சரிக்கை:
இதுகுறித்து விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோமுகி அணையில் இருந்து சுமாா் 5,600 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. எனவே, மணிமுக்தா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்நிலையில் மேமாத்தூா் அணைக்கட்டு, விருத்தாசலம் தடுப்பணை, விருத்தாசலம் காா்குடல் அணைக்கட்டு ஆகியவற்றை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
விருத்தாசலத்தில் தாழ்வான இடங்களில் வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. விருத்தாசலம் பேருந்து நிலையம் மழை நீருடன் கழிவு நீரும் சோ்ந்து குளம் போல காட்சியளிக்கிறது. மேலும், விருத்தாசலம் பகுதியில் 12 குடிசை வீடுகள் பகுதியாக சேதம் அடைந்தன.
வ.சாத்தமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணியால் வடிகால்வாயில் தண்ணீா் செல்ல முடியாததால் அப்பகுதியில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சரவணன் தலைமையிலான ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தண்ணீா் வெளியேற ஏற்பாடு செய்தனா்.
இதேபோல், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதியை மழைநீா் சூழ்ந்தது. நல்லூா் செல்லும் வழியில் உள்ள வி.சாந்தமங்கலம் தரைப்பாலம், சின்னவடவாடி செல்லும் சாலையில் உள்ள இரண்டு தரைப் பாலங்களுக்கு மேல் வெள்ளம் ஓடியது. அண்மையில் விதைப்பு செய்யப்பட்ட மணிலா பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.