விருந்தானதா விக்ரமின் வீர தீர சூரன்? - திரை விமர்சனம்
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் S.U. அருண் குமார் இயக்கத்தில் சில தடங்களுக்குப் பின் தாமதமாக வெளியாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். டிரைலரும், அறிவிப்பு விடியோவும் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா படம்?
கதைக்களம்:
வீர தீர சூரனின் கதைக்களம் என்று பார்த்தால், ஊருக்குள் பெரிய தலைக்கட்டாக இருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் மற்றும் அவரது மகனை (சுராஜ்) என்கவுண்டர் செய்தாக வேண்டும் எனப் பகை வெறியுடன் சுற்றும் அதே ஊர் எஸ்.பி. (SJ சூர்யா) திருவிழா இரவில் திட்டம் தீட்டுகிறார். அதே நேரத்தில் முந்திக்கொண்டு எஸ்.பி.யைக் கொன்றுவிட இந்த அப்பாவும், மகனும் திட்டம் தீட்டுகிறார்கள். இந்த இரண்டு பேரும் தங்கள் திட்டத்தில் வெற்றிபெற ஒரே ஆயுதமாக இருப்பது காளி (விக்ரம்) மட்டும்தான். பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகள், மளிகைக்கடை என நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவர் இந்த 2 பேரின் பகை விளையாட்டில் சிக்கி என்ன ஆகிறார் என்பதே இந்த முழு நீள ஆக்சன் திரைப்படம் வீர தீர சூரன்.

நன்றாக இருந்தது என்ன?
படத்தின் போக்கைப் பற்றி பார்ப்பதற்கு முன் பாராட்டுக்குரிய விஷயங்களைப் பற்றி பேசியாக வேண்டும். மொத்த படத்தில் முக்கால்வாசி பாராட்டுகளுக்குச் சொந்தக்காரராக வேண்டியது, படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான். ஒரு நாள் இரவில் நடக்கும் இந்தக் கதையை மிகவும் சிறப்பான முறையில் எடுத்து முடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஹீரோயிக் காட்சிகள் முதல், இருட்டுக்குள் நிலா வெளிச்சத்தில் காட்டுப்பாதையை காண்பிப்பது வரை அனைத்திலும் அவரது வேலை தனியாகத் தெரிகிறது.
அடுத்தது நடிப்பில் சொல்லப்போனால், விக்ரமிற்கு அவரது முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்த சரியான கதாப்பாத்திரம் இது இல்லை என்றபோதிலும், கதை கேட்கும் நடிப்பை குறை இல்லாமல் வழங்கியிருக்கிறார். காதல் காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் இயக்குநர் கேட்கும் அளவில் நடிப்பை வழங்கியிருக்கிறார் என்று சொல்லலாம். அவருக்கு ஜோடியாக வரும் துஷாரா விஜயன் சராசரி கதாநாயகி இடத்திலிருந்து கொஞ்சம் விலகி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். காதலில் கொஞ்சுவதிலிருந்து கதறி அழுவது வரை அவரது நடிப்பு தனித்து நிற்கிறது.

முக்கிய வில்லனாக வரும் சுராஜ், சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் அவர் ஒரு வில்லனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எஸ்.ஜே.சூரியா மற்ற படங்களில் வருவதுபோல் அதிகமாகக் கோவப்பட்டு கத்திக்கொண்டே இருக்காமல், அவரது கதாப்பாத்திரத்தில் பொறுந்தி நடிக்க முயன்றிருக்கிறார். முக்கியமாக வெங்கட் கதாப்பாத்திரம் தனித்துத் தெரிகிறார் என்றே சொல்லலாம். தோற்றத்திலும், நடிப்பிலும் அந்தக் கதாப்பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டு, அதை அவர் நல்ல முறையில் திரையிலும் கொடுத்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல்முறை விக்ரமைப் பற்றி பேசும்போது வரும் இசையிலிருந்து கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிவரை படத்தின் இசையில் ஜி.வி. தனி கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஹீரோயிக் காட்சிகளில் ஜிவியின் இசை விக்ரமை அவரது ரசிகர்களுக்கு ‘பழைய’ விக்ரமாகக் காட்டியிருக்கிறது என்றே சொல்லலாம்.
பொதுவான கமர்ஷியல் படங்களைப்போல் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி மெதுவாக கதையை ஆரம்பிக்காமல் படக்குழு சொன்னதுபோலவே படத்தின் முதல் ஷாட்டிலிருந்து கதை துவங்கிவிடுகிறது. மெதுவாக விருவிருப்பும் கூடுகிறது. முதல் 20 நிமிடம் விக்ரமின் காளி கதாப்பாத்திரத்திற்கு ஹைப் ஏற்றும் காட்சிகள் எல்லாம் நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த ஹைப் காட்சிகளுக்கு ஜிவி பிரகாஷின் இசை கச்சிதமாக பொறுந்தி உதவியுள்ளது. எஸ்.பி.-யாக வரும் எஸ்.ஜே.சூரியாவுக்கும், வில்லனாக வரும் சுராஜுக்கும் இடையிலான பகை விளையாட்டில் விக்ரம் எப்படி பகடைக்காய் ஆகிறார் என்பதை முதல் 45 நிமிடத்தில் நன்றாகப் படமாக்கியுள்ளார் இயக்குநர். எஸ்.ஜே.சூரியாவைக் கொல்ல விக்ரம் எடுக்கும் முதல் முயற்சியும், அதில் ஏற்படும் சிக்கல்களும் படத்தின் விருவிருப்பைக் கூட்டிய காட்சிகளில் ஒன்று.

இரண்டாவது பாதியில் வரும் அந்த 18 நிமிட சிங்கிள் ஷாட்டை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. 18 நிமிடம் நகருவதே தெரியாத அளவுக்கு விருவிருப்புடன் நகர்கிறது அந்தக் காட்சி. சின்ன இடம் என்றால்கூட பரவாயில்லை, பெரிய லேண்ட் ஸ்கேப்பில் செட் அமைத்து, 18 நிமிடக் காட்சியை எடுப்பது கண்டிப்பாக எளிதான விஷியமில்லை. அதை படக்குழு மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை எந்த வித சளிப்பும் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண். முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் வேகமாக நகர்ந்திருப்பது நன்று.
நெருடலாக இருப்பது என்ன?
படத்தின் முதல் 20 நிமிடத்தில் ஏறிய ஹைப்பையும், விருவிருப்பையும் படத்தின் இடைவேளை வரை கொண்டு செல்வதில் சிறிய சிரமம் இருந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும் சளிப்புத் தட்டும் வகையில் படத்தில் எந்தக் காட்சியும் இல்லை.
இடைவேளைக் காட்சி புதிதாக இருந்தாலும் தனித்துவமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கதாப்பாத்திரங்களாக பார்க்கும்போதும், நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் கூடுதல் கவனம் இருந்திருக்கலாம் என்றே சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் தனக்கென தனிக் கதையுடன் களமிறங்கும் எஸ்.ஜே.சூரியா கதாப்பாத்திரம் போகப் போக எல்லா கதாப்பாத்திரங்களுடனும் டீல் பேசிக்கொண்டே இருக்கிறது. கடைசியில் சராசரி வில்லனாக மாறிவிடுவதும் சிறிய ஏமாற்றம் எனலாம்.
முக்கியமாக சுராஜின் அப்பா மற்றும் அவரது குடும்பத்தினராக நடித்துள்ள பலர், படத்தில் சுத்தமாக ஒட்டாதது மிகப்பெரிய குறையாக தெரிந்துவிடுகிறது. எதார்த்தமற்ற நடிப்பு, கதையில் வீரியத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.
முதல் பாதியை விட விருவிருப்பாக நகரும் இரண்டாம் பாகம், கடைசியில் எங்கு முடிகிறது எனும் புள்ளி, சிறிய ஏமாற்றத்தைத் தான் கொடுத்துள்ளது. உருவாகியிருக்கும் மிகப்பெரிய பிரச்னையிலிருந்து ஹீரோ எளிதாக தப்பிப்பது ஒரு கமர்ஷியல் எஸ்கேப்பைப் போலவே தோன்றுகிறது.

இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடும் அந்தப் புதுமை படத்தில் எங்கும் தெரியாதது மற்றொரு ஏமாற்றம். முதல் பாகத்தில் என்ன நடந்தது என்ற எந்தவித கேள்வியும் எந்த எதிர்பார்ப்பையும் இந்த இரண்டாம் பாகம் கொடுக்கவில்லை.
கதையாக பார்க்கும்போதே, விக்ரம் கதாப்பாத்திரம் இந்த இரண்டு பேரின் பகை விளையாட்டுக்குள் சிக்கித் தவிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை எனச் சொல்லலாம். இந்த இரண்டு வில்லன்களுக்கு நடுவில் நடக்கும் இண்டென்ஸ் சண்டையில் விக்ரமிற்கு மிகச் சிறிய பங்குதான் உள்ளது. விருப்பமில்லாமல் அவர் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அவர் கிளம்பி வீட்டிற்கு சென்றால்கூட யாரும் தேடாத அளவில் அவர்களுக்கு சண்டை விருவிருப்பாக சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

மொத்தமாக,
அருண் குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ஒரு நல்ல கமெர்ஷியல் படமாக, ‘விக்ரம்’ படமாக இந்த வீர தீர சூரன் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்.
சினிமாவாக பார்க்கும்போது சில குறைகள் தெரிந்தாலும், கமெர்ஷியல் ஹீரோவுக்கான படமாக பார்க்கும்போது விருவிருப்புக்குக் குறையில்லாமல் வேகமாக நகர்ந்து முடியும் இந்தத் திரைப்படத்தைக் கண்டிப்பாக திரையில் கண்டு களிக்கலாம்.