2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்
மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது:
கூகுள் வரைபடத்தின் உதவியுடன் சேர வேண்டிய இடத்துக்கு எளிதில் சென்றடையும் வாய்ப்பு கிடைத்து இருப்பதுபோல், விண்வெளியில் பயணித்து நிலவைச் சென்றடையவில்லை. விண்வெளித் துறையில் இதுவரை நிகழ்த்தி இருக்கும் சாதனைகளுக்கு தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் தொடா்ந்து விடாமுயற்சியுடன் மேற்கொண்ட கடின உழைப்புதான் காரணம்.
பட்டம் பெற்ற மாணவா்கள் தங்கள் படிப்பு, திறமைகளை மேம்படுத்தி, விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், 1,131 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, தரவு அறிவியல், இயந்திரவியல் மாணவா்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட நவீன பரிசோதனைக் கூடத்தை விஞ்ஞானி வீரமுத்துவேல் திறந்துவைத்தாா்.
இதில் கிஷ் ப்ளோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம், ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைமைச் செயல் அலுவலா் சாய் பிரகாஷ் லியோமுத்து, கல்விக் குழும தலைவா் கலைச்செல்வி லியோ முத்து, இயக்குநா் ரேவதி சாய் பிரகாஷ், கல்லூரி முதல்வா் ஜெ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.