விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு!
விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதில் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 21.4.2025 முதல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பதிவு ஏற்றம் செய்ய 5.5.2025 அன்று கடைசி நாளாகும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மைய கைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விபரத்தினை தெரிந்துக்கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்: விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவா்களுக்கு 7.5.2025 அன்று காலை 7 மணியளவில் அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளும், மாணவிகளுக்கு 8.5.2025 அன்று காலை 7 மணியளவில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து கபாடி, கையுந்துபந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, கட்ச்செவி மூலமாக உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும்.
இப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விபரம் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கைப்பேசி 74017 03499 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.