செய்திகள் :

விழுப்புரம்: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்! - நகராட்சி ஆணையர் அறையில் நடந்து என்ன?

post image

ஆட்டம் கண்ட நகராட்சிக் கூடாரம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேயான வாக்குவாதத்தில், ரம்யாவின் காலில் முனியப்பன் விழ வைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் நகராட்சி கூடாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், திண்டிவனம் நகராட்சி ஆணையர் அறையில், 8-வது வார்டு கவுன்சிலரான ரவிச்சந்திரன், தி.மு.க பெண் கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட 8 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நகராட்சி ஊழியரான முனியப்பன் அங்கு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்.

திண்டிவனம் நகராட்சி அலுவலகம்

காலில் விழுந்து கதறிய பட்டியல் சமூக ஊழியர்

மிக சரியான 1.30 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், கவுன்சிலர் ரம்யா அமர்ந்த சேரை நகர்த்திவிட்டு அவரது காலில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார் முனியப்பன். அப்போது அந்த அறையில் இருந்தவர்கள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதுடன் அந்தக் காட்சி முடிவடைகிறது.

நகராட்சித் தலைவர் அறையில் பதிவான இந்த சிசிடிவி வீடியோ பொது வெளியில் கசிந்த நிலையில், `பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 3 தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு வி.சி.க கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடமும், நகராட்சி மேனேஜரிடமும் நேற்று புகாரளித்திருக்கின்றனர்.

`அந்தக் கோப்பு என்னாச்சு...?’

புகாரளித்தவர்களில் ஒருவரான 22-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜலட்சுமியைத் தொடர்பு கொண்டபோது, அவரது கணவர் வெற்றிவேல் நம்மிடம் பேசினார். ``2021-ம் ஆண்டு தெருவிளக்கு தொடர்பான கோப்பு ஒன்றை தேடித் தரும்படி, பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் முனியப்பனிடம் கேட்டிருக்கிறார் ஆணையர் சரவணன்.

முனியப்பன் அந்தப் பிரிவுக்கு வந்து ஒரு வருடம்தான் இருக்கும் என்பதால், பார்த்து தேடித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து ஆகஸ்ட் 28-ம் தேதி `அந்தக் கோப்பு என்னாச்சு?’ என, தனக்கு தொடர்பே இல்லாத கோப்பு குறித்து முனியப்பனிடம் கேட்டிருக்கிறார் 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரம்யா. அதற்கு, `தேடித் தருகிறேன் மேடம்’ என்று அவர் சொன்னதும், ரம்யா சென்று ஆணையரை அழைத்து வருகிறார்.

கவுன்சிலர்கள் புகார்

`அக்காவையே எதிர்த்துப் பேசுறியா…?’

அப்போது `இந்த வேலையை இவனிடம் சொன்னதுக்கு பதிலா வேறு ஒரு ஆளுகிட்ட சொல்லி இருக்கலாம்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார் ரம்யா. அதையடுத்து, `மேடம் அந்த ஃபைலுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.

நான் அதைத் தேடி ஆணையரிடம் கொடுக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் முனியப்பன். தொடர்ந்து, `நான் யார் தெரியுமா ? என்னிடமே திமிராகப் பேசுறியா’ என்று மிரட்டியிருக்கிறார் ரம்யா. அதன்பிறகு ரம்யாவின் கணவர் உள்ளிட்ட 5 பேர் வந்து, `அக்காவையே எதிர்த்துப் பேசுறியா…?’ என்று மிரட்டிவிட்டுச் சென்றதும், முனியப்பன் பயந்து விடுகிறார்.

கணவர் மரூர் ராஜாவுடன் கவுன்சிலர் ரம்யா

அலுவலக `ஜும் மீட்’டுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து

மறுநாள் 29-ம் தேதி, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் புகாரளித்தார் ரம்யா. அதனடிப்படையில் முனியப்பனை கண்டித்துவிட்டுச் சென்று விடுகிறார் ஆணையர். ஆனால் ஆணையர் அறையில் அமர்ந்து கொண்ட ரம்யா, நகராட்சித் தலைவரின் கணவர் ரவிச்சந்திரனை போன் செய்து அழைக்கிறார். அங்கு ஏற்கெனவே அலுவலக ரீதியான `ஜூம் மீட்’ நடந்து கொண்டிருந்தது.

நகராட்சி மேலாளர் பழனி, சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் ரம்யாவுடன் அமர்ந்து, முனியப்பனை அழைத்து மீண்டும் விசாரிக்கிறார்கள். அப்போது, `நான்தான் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டேனே?’ என்று கூறிய அவர், மீன்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

காவல் துறைக்கு சென்ற புகார்

அதற்கு,`வாயால் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா?’ என ரம்யா கேட்டதும், ஏற்கெனவே பயந்து போயிருந்த முனியப்பன் அவரது காலில் விழுந்து கதறி அழுகிறார்.

வாயால் மன்னிப்பு கேட்டால் போதுமா என்றால், காலில் விழுங்கள் என்று சொல்வதாகத்தானே அர்த்தம் ? இத்தனை பேர் அமர்ந்து கொண்டிருந்த ஒரு அறையில், அரசு ஊழியர் ஒருவரை நிற்க வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு ஆதரவாக நாங்கள் டி.எஸ்.பி-யிடம் புகாரளித்திருக்கிறோம்” என்றார்.

முன்னாள் அமைச்சர் மஸ்தானுடன் மரூர் ராஜா

`என் மீது கை வைத்துவிட்டார்...’

இதற்கிடையில் முனியப்பன் தன்னுடைய இடுப்பில் கை வைத்ததாக அதே டி.எஸ்.பி-யிடம் புகாரளித்திருக்கிறார் கவுன்சிலர் ரம்யா. இதுகுறித்துப் பேச அவரைத் தொடர்புகொண்டபோது, ``பிரஸ்மீட்டில் அதுகுறித்து விரிவாக பேச இருக்கிறேன்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

2023-ல் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவருமான மரூர் ராஜாவின் மனைவிதான் ரம்யா.  

`அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை...’

அதையடுத்து நகராட்சித் தலைவர் நிர்மலாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுத்த அவரது கணவர் ரவிச்சந்திரன், `அவருக்கு உடல்நிலை சரியில்லை. என்னிடமே சொல்லுங்கள் என்றார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, `அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. அவரேதான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

முன்னாள் அமைச்சர் மஸ்தானுடன் மரூர் ராஜா மற்றும் ரம்யா

`நான் தி.மு.க நகர அவைத் தலைவர்...’

அதை டி.எஸ்.பி அலுவலகத்திலும் அவர் கூறிவிட்டார்” என்றவரிடம், `ஆணையர் அறையில் அவர் இல்லாத நேரத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறீர்களே..?’ என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, ``நானும் ஒரு கவுன்சிலர்தான் சார். அத்துடன் தி.மு.க-வின் நகரமன்ற அவைத் தலைவராக இருக்கிறேன்” என்றார்.

அதையடுத்து முனியப்பனை பலமுறை நாம் தொடர்பு கொண்டபோதும், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

`தி.மு.க நகர அவைத் தலைவராகவும், கவுன்சிலராகவும் இருந்தால் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இல்லாத நேரத்தில் அதிகாரம் செலுத்தலாமா’ என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் ... மேலும் பார்க்க

India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கிய... மேலும் பார்க்க