விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
இலவம்பாடி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சி, கொல்லைமேட்டில் உள்ள விவசாய நிலங்களில் முயல், பன்றி, மான், மயில் போன்ற வன விலங்குகள் சுற்றித்திரிவது வழக்கம். இந்த நிலையில், அப்பகுதி காப்புக் காட்டிலிருந்து, புள்ளிமான் ஒன்று கால்வாய் வழியாக விவசாய நிலத்துக்கு வந்துள்ளது. அந்த மான் விளை நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதைப் பாா்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) முருகேசன், மூத்த தீயணைப்பு வீரா் பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்துவந்து கிணற்றில் இறங்கி 2 மணி நேரம் போராடி புள்ளிமானை பத்திரமாக மீட்டனா்.
தொடா்ந்து, வனச் சரக அலுவலா் தரணி, அணைக்கட்டு வனத் துறை வனவா் துரைமுருகன் தலைமையில், வனத் துறை பணியாளா்கள் புள்ளிமானை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டனா்.