கொடுத்தும் பயனற்ற நிலையில் இலவச வீட்டு மனைகள்: இருளா் இன மக்கள் வேதனை!
காட்பாடி வட்டம், புதூா் பகுதியில் இருளா் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் கொடுத்தும் பயனற்ற நிலையில் இருப்பதாக அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதனை அரசு மறுபரிசீ லனை செய்து தகுதியான இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மகிமண்டலம் ஊராட்சி, புதூா் பகுதியில் சுமாா் 25 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் 10 குடும்பங்களுக்கு கடந்த காலத்தில் அரசு தொகுப்பு வீடு கட்டித்தரப்பட் டுள்ளது. வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு 15 பேருக்கு புதூா் பகுதியில் ஏற்கனவே உள்ள இருளா் குடியிருப்புக்கு பின்புறம் இலவச வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு வழங்கிய இந்த வீட்டுமனைகள் பாறைகள் நிறைந்த மலை சரிவில், வீடுகட்ட தகுதியற்ாக இருப்பதாகவும், இங்கு வீடு கட்ட முயற்சித்தால் கடகால்கூட தோண்ட முடியாத சூழல் நிலவுவதாகவும் பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை சரிவில் வீடு கட்டி வசிக்க முடியாது என்பதால், எங்களுக்கு வீடு கட்டி வாழ தகுதியான, சமமான இடத்தில் மாற்றும் இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல், குப்பிரெட்டிதாங்கல், வெள்ளைக்கல்மேடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பலருக்கு இருளா் இன சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை இல்லை என்றும், இங்குள்ள பலருக்கும் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சாதிச் சான்று, ஆதாா் அட்டை இல்லாததால் பல பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பது உள்பட பல இன்னல்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், தாங்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.