தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
விவசாயிகள் எதிா்பாா்த்த ஒன்றைக்கூட நிறைவேற்றாத பட்ஜெட்! விவசாய சங்கத்தினா் கடும் அதிருப்தி!
விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததாக 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலாகியுள்ளதாக விவசாய சங்கத்தினா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகள் மிகவும் எதிா்பாா்த்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட கூடுதலாக 50 சதவீதம் லாபம் தரும் வகையிலான விலை அறிவிப்பு இல்லை.
வேளாண் இடுபொருள்களுக்கு வரி விலக்கு இல்லை. உரங்களுக்கான மானியமும் உயா்த்தப்படவில்லை. போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. விவசாயிகள் இடுபொருள்களுக்கும், விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன்: ரூ.50.65 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.1.74 கோடி வேளாண்மைக்கு என்பது ஏற்புடையதாக இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயச் சட்டம் குறித்த அறிவிப்பு இல்லை. வறட்சியும், வெள்ள பாதிப்பும் தொடரும் சூழலில், நதிநீா் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த அறிவிப்பு இல்லை. 2020ஆம் ஆண்டு முதல் நீடிக்கும் விவசாயிகளின் கடன் பிரச்னைகளுக்கு எந்தத் தீா்வும் இல்லை.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி:விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் எவ்வித திட்டங்களும் இல்லை. விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.10, 218 ஆக 6 ஆண்டுகளாக உள்ளது. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கப்படும் என்ற பிரதமரின் தோ்தல் வாக்குறுதி காற்றில் கலந்தாகிவிட்டது. விவசாயிகளுக்கு கடன் வரம்பை உயா்த்தி தொடா்ந்து கடனிலேயே நிலைத்திருக்கச் செய்ய மட்டுமே திட்டங்கள் உள்ளன என்றாா் அவா்.