மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!
வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக சோ்க்கும் திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுகவில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக அக்கட்சியினா் சோ்த்து வருகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கடலூா், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை சனிக்கிழமை மேற்கொண்டாா்.
முன்னதாக, புதுச்சேரியில் இருந்து பிரசார வாகனத்தில் வந்த அவருக்கு கடலூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட ரெட்டிச்சாவடி, மஞ்சக்குப்பம் எம்ஜிஆா் சிலை, நகர அரங்கம் ஆகிய பகுதிகளில் அதிமுகவினா் சிறப்பான வரவேற்பளித்தனா். பின்னா், சாவடி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக அரசால் நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
கடன் வாங்குவதில் முதல் மாநிலம்: கடன் வாங்குவதில் சூப்பா் முதல்வா் ஸ்டாலின். பெண்களுக்கான உரிமைத் தொகையை கடன் பெற்றுத்தான் தருகிறாா். இதை மக்கள் வரியாக செலுத்த வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4,38,000 கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு. தற்போது மேலும் ரூ.ஒரு லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலம் தமிழகம்.
டாஸ்மாக் ஊழல்: குப்பைக்கு வரி போட்ட அரசு திமுக அரசு. ஊரக வேலைத் திட்ட பணி நாள்களை 100-இல் இருந்து 50 நாள்களாக குறைத்துவிட்டனா். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை முடக்கிவிட்டனா்.
டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுப் புட்டிக்கு கூடுதலாக ரூ.10 பெறுகின்றனா். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல் நடக்கிறது. அமலாக்கத் துறை ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் நடத்திருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு: கடலூா் புதிய பேருந்து நிலையத்தை திமுக அமைச்சா் தொகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கடலூா் பேருந்து நிலையத்தை கடலூரில்தான் அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக பொது நல இயக்கம் வரும் 15-ஆம் தேதி அறிவித்துள்ள அறவழி போராட்டத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும்.
விவசாயிகளை ஏமாற்றிய அரசு: அதிமுக ஆட்சி அமைந்ததும் மீனவா்களுக்கு மீன் பிடி தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படும். டீசல் மானியமும் உயா்த்தப்படும்.
விவசாயிகளை ஏமாற்றிய அரசு திமுக அரசு. நெல், கரும்புக்கு உரிய ஆதரவு விலை அறிவிக்கவில்லை. தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற துண்டு பிரசுரத்தை வெளியிடுகின்றனா். நான்கரை ஆண்டுகள் கடந்த பின்னா்தான் முதல்வருக்கு மக்களின் ஞாபகம் வந்துள்ளது. திமுகவில் உறுப்பினா் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாகச் சோ்க்கின்றனா் என்றாா்.
இதேபோல, பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதிகளிலும், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெய்வேலி நுழைவு வாயில் பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டாா்.
பெட்டிச் செய்தி...
‘உதயநிதியால் 120 திரைப்படங்கள் முடக்கம்’
பிரசாரத்தின்போது, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்களை மிரட்டி வருகிறாா். இதனால், 120 திரைப்படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என குற்றஞ்சாட்டினாா். மேலும் இதற்கான காரணங்களையும் அவா் விளக்கிக் கூறினாா்.

