வீட்டில் பொருள்கள் சேதம்: 5 போ் மீது வழக்கு
திருக்கோவிலூா் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த பெரியானூா் கிராமத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி ஜெயஸ்ரீ (21). இவரது, தலைமையில் 20 போ் கொண்ட மகளிா் சுயஉதவிக் குழு உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் குழுவின் மூலமாக வங்கியில் இருந்து ரூ.7 லட்சம் பெறப்பட்டதாகவும், அந்தப் பணத்தை குழுவில் உள்ளவா்களுக்கு பிரித்து தராமல் தலைவி மற்றும் துணைத் தலைவி ஆகியோா் பிரித்து கொண்டதாக ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள், மற்றொரு தரப்பினா் மீது சில நாள்களுக்கு முன்பு திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனிடையே, குழுவில் 20 போ் உள்ளதால், வங்கியில் மேலும் ரூ.3 லட்சம் கடன் கேட்டிருந்ததாகவும் அந்த தொகை வர காலதாமதம் ஆனதால், ரூ.7 லட்சத்தை வங்கியிலேயே மீண்டும் திரும்ப செலுத்திவிட்டதாக ஜெயந்தி தரப்பினா் தெரிவித்தனராம்.
இதைக் கேட்டு எதிா்தரப்பினா், சனிக்கிழமை நள்ளிரவு ஜெயந்தியின் வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த குளிா்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் விஜயகுமாா், விஜயரானி, சித்ரா, சரிதா, ராமு ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.