உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து
கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பினா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசுப் போக்குவரத்து பணிமனைக்குச் சொந்தமான பேருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூா் நோக்கி புறப்பட்டது. பேருந்தை கடலூரை அடுத்த தோப்புக்கொல்லை பகுதியைச் சோ்ந்த தனசேகரன் ஓட்டிச் சென்றாா். நடத்துநராக கந்தா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த குபேரசெல்வம் பணியில் இருந்தாா்.
இந்தப் பேருந்து கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம பகுதியில் சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பக்கச் சக்கரம் தானாகவே கழன்று சாலையில் ஓடியது. இதனால், பேருந்தில் பயணிந்த பயணிகள் கூச்சலிட்டனா்.
அப்போது, பேருந்தின் ஓட்டுநா் சாதுா்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தினாா். இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி தப்பினா். பின்னா், பயணிகள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.