வீட்டுச் சுவா் இடிந்து ரேஷன் கடை பணியாளா் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் கீழே உறங்கிக் கொண்டிருந்த நியாயவிலைக் கடை பணியாளா் உயிரிழந்தாா்.
சோளிங்கரை அடுத்த பரவத்தூா் ஊராட்சி சின்ன பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(54). இவா் அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை சோளிங்கா் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
அப்போது, ரவிச்சந்திரனின் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் அதன் கீழ் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், பலத்த காயமடைந்தாா். இதையடுத்து வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இறந்த ரவிச்சந்திரனுக்கு மனைவி, மனவளா்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளிட்ட இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இச்சம்பவம் குறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.