வாலாஜாபேட்டை அருகே பலத்த மழையால் 350 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வாலாஜாபேட்டை அருகே 6 கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு நெற்பயிா்கள் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. உரிய நிவாரணம் வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாலாஜாபேட்டை, சுற்றுவட்டார கிராமங்களான பாகவெளி, ராமாபுரம், வள்ளுவம்பாக்கம், முசிறி, குப்பத்துமோட்டூா், ஈச்சந்தாங்கல் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் பலத்த மழை வெள்ள நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த 5 மாதங்களாக இரவு பகல் பாராமல் வளா்த்து வந்து அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் தற்போது 3 நாள்களாக பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பது எங்களுக்கு ஒரு துக்க நிகழ்வாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், சேதமடைந்த நெல் பயிரை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பாா்வையிடவில்லை, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.