ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!
வீர தீர சூரன் படம் வெளியாகுமா?
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட முழுநீள ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் வீர தீர சூரன் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பி4யு என்ற நிறுவனம், வீர தீர சூரன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி4யு நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெற்றுள்ளது. எனவே, இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்தார்.
ஆனால் படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படாமல் படம் வெளியாவதால் படத்தை ஓடிடி-யில் விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பி4யு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக ரூ.7 கோடி வழங்கவேண்டும். மேலும், இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படுவதற்கு முன் படத்தை வெளியிட முன்வந்ததால் 48 மணி நேரத்திற்குள் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தப் படத்தை இன்று வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் காலை காட்சி ஓடாததால் அனைவருக்கும் பணம் திருப்பியளிக்கப்பட்டது. இந்த நிலையில், மதியக் காட்சியும் திரையிடப்படவில்லை.
படம் இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற திரையரங்குகளில் கூடி வருகின்றனர்.