US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மகன் ரமேஷ் (43). இவருக்கு மனைவி காவேரி, மகள் ஆனந்தி, மகன் சத்யதாசன் ஆகியோா் உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாக ரமேஷ் மலேசியாவில் உள்ள உணவகத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ரூ. 5 லட்சம் பணம் வேண்டும் என கைப்பேசி மூலம் ரமேஷ் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இந் நிலையில், பெரம்பலூரில் கடந்த 3-ஆம் தேதி மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரையும், 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜையும் நேரில் சந்தித்த காவேரி மற்றும் அவரது குடும்பத்தினா், ரமேஷின் உடலை மீட்டு சொந்த கிராமத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், அயல்நாட்டினா் துறையின் அரசுச் செயலருக்கும், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையருக்கும் கடிதம் அனுப்பினாா். அதனடிப்படையில், உயிரிழந்த ரமேஷ் உடல் மீட்கப்பட்டு மலேசியா நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை குன்னத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.