முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி
முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கிருஷ்ணாபுரம் கடைவீதியில் திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. பின்னா், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கருணாநிதி, பேரறிஞா் அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப் படத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில், அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந் நிகழ்ச்சிகளில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் செ. அண்ணாதுரை, ஆா். முருகேசன், மாவட்டப் பொருளாளா் செ. ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம். ராஜ்குமாா், தி. மதியழகன், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தங்க.கமல், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.